அன்புமணி ராமதாஸ் web
தமிழ்நாடு

மாம்பழ சின்னம் முடக்கக்கோரிய வழக்கு.. ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

பாமக தலைவராக அங்கீகரிக்க வேண்டும், மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து ராமதாஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Rishan Vengai

பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு சின்னத்தை ஒதுக்கியது சரியானது எனவும், இது தந்தை-மகன் பிரச்சனை மட்டுமே எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. ராமதாஸ் தரப்புக்கு இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு உத்தரவிடப்பட்டது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டாக பிரித்தது.

இந்நிலையில், பாமக எங்களிடமே இருக்கிறது என இரு தரப்புமே உரிமை கொண்டாடின. ஆனால் ஆவணங்களின் படி கட்சியும், சின்னமும் அன்புமணி தரப்பிற்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததைத் தொடர்ந்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராமதாஸ், அன்புமணி

இவ்வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பாமக தலைவர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு முடிவு செய்யும் அதிகாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. தலைவர் யார் என்ற விவகாரத்தை சிவில் நீதிமன்றம் விசாரிப்பதே சரியாக இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கையும் முடித்துவைத்தது.

இந்தசூழலில் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராமதாஸின் மனு தள்ளுபடி..

ராமதாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை 12வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ’அன்புமணி ராமதாஸ் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், ஆனால் மீண்டும் தலைவராக ஆவணங்களை மோசடியாக தயாரித்து அன்புமணி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளதாகவும், இதுகுறித்து ஐந்து முறை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு என்ன இவ்வளவு ஆர்வம் என தெரியவில்லை எனவும் ராமதாஸ் தரப்பு வக்கீல் வாதங்களை முன்வைத்தார்.

அன்புமணி தரப்பில், இது தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனை மட்டுமே, ஆனால் அதை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

ராமதாஸ்

தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த வழக்கு தந்தை-மகனுக்கு இடையே உள்ள பிரச்சனை, மாம்பழ சின்னத்தை தற்போதைய நிலையில் முடக்க முடியாது, தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கிவிட்டதால் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு தெரிவிக்க முடியாது என்றும், புதுவையில் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது என்றும் வாதிடப்பட்டது.

3 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மபிரபு, “மாம்பழச் சின்னத்தை முடக்கக்கோரிய பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தன்னை தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற ராமதாஸின் கோரிக்கையை சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.