“அந்த பெண் ஏன் புதருக்கு பின்னால் போகணும்..” நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சை பதில்!
பெண்கள் வெளியே செல்லும் போது பாதுகாப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய எஸ்.வி.சேகர், பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர், பெண்கள் வெளியே செல்லும்போது துணை தேவைப்படுவதாகவும், உடன் துணைக்கு யாரும் செல்லாமல் சட்ட ஒழுங்கு சரியில்லை என கூறுவை விமர்சித்தார். பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் பல கிலோமீட்டர் நடந்தே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தார்.
இப்படி தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், பெண்களை ஏன் வெளியே அனுப்புகிறீர்கள் என்ற கேள்வியை நடிகர் எஸ்.வி.சேகர் எழுப்பியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை சோப்பு வேண்டுமென்று சொன்னால் கூட வெளியே போகவிடமாட்டேன் என்றும், சட்ட ஒழுங்கு சரியில்லை என சொல்கிறார்கள் அந்த பெண் ஏன் புதருக்கு பின்னால் போகணும் என்றும் பேசியுள்ளார். அவருடைய பேச்சு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது போல சித்தரிக்கிறது.
அந்த பெண் ஏன் புதருக்கு பின்னால் போகணும்..
திண்டுக்கல்லில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கையும், பாலியல் துன்புறுத்தலையும் ஒப்பிட்டு பேசுவதை நீங்கள் யோசிக்க வேண்டும். என் வீட்டு பீரோவைப் பூட்டாமல் விட்டுவிட்டு, திருடன் திருடிவிட்டான் என்றால் அதற்குச் சட்டம் ஒழுங்கு எப்படிப் பொறுப்பாகும்? பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியே கழிவறைக்கு செல்லவேண்டும் என்று சொன்னால் கூட துணைக்கு ஒருவர் செல்லவேண்டும். சுதந்திரம் வேறு, பாதுகாப்பு வேறு. நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் பத்து கோடி மக்கள் தொகையில் நான்கு அல்லது 5 பாலியல் குற்றங்கள் நடந்திருக்குமா. ஆனால், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
என்கவுண்டர் செய்யும்போது மனித உரிமை என்று உடனே வந்துவிடுகிறார்கள். உங்கள் பெண் பாதிக்கப்பட்டால் உடனே சுடவேண்டும் என தோன்றுகிறது தானே, அதேதான மற்ற குடும்பத்திற்கும். அதேபோல லாக்கப் டெத்தும் நடந்துவருகிறது, காவலர்கள் கடுமையாக நடந்துகொள்கின்றனர். அவர்களை சஸ்பெண்ட் செய்யாமல் டிஸ்மிஸ் செய்யவேண்டும், உன்மேல் குற்றமில்லை என்பதை நிரூபித்தபிறகு நீ வந்து வேலையில் சேர்ந்துக்கொள் என சொல்லவேண்டும். நம் நாட்டில் தண்டனைகள் கடுமையாக இல்லை..
பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஒரு பெண் புதருக்குப் பின்னால் மறைந்து நின்றபோது குற்றவாளிகள் வந்துவிட்டார்கள் என்கிறார்கள். அந்தப்பெண் ஏன் புதருக்கு பின்னால் செல்லவேண்டும், உடனே போலீஸ் லைட் போடனும் என்று சொல்கிறார்கள். போலீஸ் எல்லா புதருக்குள்ளுமா லைட் போட்டு வைப்பார்கள்? ஒரு நியாயமான குடிமகனாக இதைக் கேட்கிறேன். நம்மை நாமே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கடைக்கு கூட அனுப்ப மாட்டோம். சோப்பு வேண்டுமானால் வாட்ச்மேனை அனுப்பு, இல்லையா வாட்ச்மேனை கூட அழைத்துச் செல் என்று கூறுவோம். எல்லா வேலையும் போலீஸால் எப்படி செய்யமுடியும்” என பேசினார்.

