இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரித்துள்ளது
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
நேற்று உயிரிழப்பு 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 18,810 பேர் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்துள்ளனர். 197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில் 519 இந்தியர்கள் மற்றும் 43 வெளிநாட்டினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.