Thiruvarur  Pt web
தமிழ்நாடு

தமிழ்நாடு தேர்தல் 2026 | திமுக கோட்டையாக திருவாரூர்.. நெற்களஞ்சிய பூமியில் வெல்லப்போவது யார்?

தொகுதி அலசலில் இன்று நாம் காணவிருப்பது நெற்களஞ்சியமான திருவாரூர் மாவட்டம்.

PT WEB

தமிழகத்தின் நெற்களஞ்சியங்களுள் ஒன்றாக திகழும் திருவாரூர் மாவட்டம், முப்போகம் விளையும் செழுமையான விவசாய பூமியாகும். முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள், வடுவூர் பறவைகள் சரணாலயம் என இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளைக் கொண்டது. பூந்தோட்டம் சரஸ்வதி கோவில், ஸ்ரீவாஞ்சியம் எமதர்மன் கோவில் போன்ற அரிய திருத்தலங்களும், தமிழகத்தின் ஒரே மத்திய பல்கலைக்கழகமும் இங்கு அமைந்துள்ளன.

Muthupettai Mangrove, Thiruvarur

திருவாரூர் தொகுதி. தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழும் திருவாரூர் தொகுதி முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றார். அவருக்குப் பின் பூண்டி கலைவாணன் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்தத் தொகுதியில் 1971 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் தாழை.மு. கருணாநிதி என்பவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். கருணாநிதி என்ற பெயருடன் நெருங்கிய தொடர்புள்ள இந்தத் தொகுதியில் 9 முறை தி.மு.க வென்றுள்ளது. இந்தத் தொகுதியில், அ.தி.மு.க ஒருமுறை கூடக் வெற்றியை கண்டதில்லை. இங்குப் பிள்ளைமார் சமூகம், ஆதி திராவிடர் மற்றும் முஸ்லிம் வாக்குகள் வெற்றியினைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன.

நன்னிலம் தொகுதி அடுத்ததாக, அ.தி.மு.க-வின் பிடிக்குள் இருக்கும் நன்னிலம் தொகுதி. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் இங்குத் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். தி. மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே தலா 4 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வென்றுள்ள இந்தத் தொகுதியில், கடந்த முறை வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க வென்றது. இதனால், இம்முறை வன்னியர், ஆதி திராவிடர் மற்றும் பிள்ளைமார் சமூக வாக்குகளைக் கவரப் போவது யார் என்பதில் போட்டி நிலவுகிறது.

Vaduvur Birds Sanctuary, Thiruvarur

திருத்துறைப்பூண்டி தொகுதி, தனித் தொகுதியான திருத்துறைப்பூண்டி, கம்யூனிஸ்டுகளின் எஃகுக் கோட்டை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இங்கு அதிக முறை வென்றுள்ளது. அ.தி.மு.க ஒருமுறை கூட இங்கு வென்றதில்லை என்பது ஆச்சரியமான தகவல். ஆதி திராவிடர் வாக்குகள் அதிகம் உள்ள இத்தொகுதியில், இடதுசாரிகளின் ஆதிக்கமே இப்போதும் மேலோங்கி நிற்கிறது.

மன்னார்குடிதொகுதி ஒருகாலத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மன்னார்குடிதொகுதி, இப்போது தி.மு.க- வின் கோட்டையாக மாறியுள்ளது. தற்போதைய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இங்குத் தொடர்ந்து மூன்று முறை வென்று வலுவாக உள்ளார். முக்குலத்தோர் வாக்குகள் இங்கு மிக முக்கியமானது

மொத்தத்தில், திருவாரூர் மாவட்டம் விவசாயக் கூலிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.