ப. சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் எக்ஸ்
தமிழ்நாடு

”1967-ல் இருந்து காங்கிரஸ்-க்கு ஒரு ஏக்கம் உள்ளது” கூட்டணி ஆட்சி பற்றி கார்த்தி சிதம்பரம் பதில்!

தமிழ்நாட்டில் 2026இல் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு வந்தால் அதனை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

PT WEB

றுதமிழ்நாட்டில் 2026இல் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு வந்தால் அதனை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளும் என்று சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் 80-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தந்தை ப.சிதம்பரத்தின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டார். முன்னதாக, அவர் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார்.

கார்த்திக் சிதம்பரம்

கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் அரசியல் பிரச்சாரம் குறித்த கேள்வி கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், "விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். யார் கட்சி தொடங்கினாலும் அரசாங்கத்தை எதிர்த்து பேசுவது இயல்பு. தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனர்ஜி மற்றும் ஆதரவு இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அது ஒரு வடிவம் பெற்று உருமாறி வாக்குகளைப் பெறுவார்களா? என்பதை நான் இப்போது சொல்ல முடியாது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். சீர்தூக்கி பார்க்கும் பொழுது திமுக அரசு பல கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளதால் பெரிதாக குறை சொல்லி விட முடியாது. மகளிர் உரிமைத் தொகை பெரும்பாலான பெண்களுக்கு சென்று சேர்கிறது. சில பேருக்கு சேராமல் இருப்பது நிர்வாக காரணங்களால்தான். இருந்தாலும், அந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது" என்றார்.

விஜய், மகளிர் விடியல் பயணம்.

திமுக vs அதிமுக என்கிற களம் 2026 தேர்தலில் மாறுகிறதா? என்ற கேள்விக்கு, ”அதிமுக ஒரு தனித்த அல்லது சுதந்திரமான (INDEPENDENT) கட்சியாக இல்லாமல் பாஜகவுக்கு SUBSIDIARY ஆக இருப்பதால்தான் முன்பெல்லாம் அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தார்கள். ஆனால், தற்போது மாறுபட்ட தலைமை உள்ளது. கட்சியில் குழப்பம் நீடிக்கின்றது, ஒற்றுமையாக இல்லை, ஒரு பஞ்சாயத்து வந்தால் டெல்லி சென்று வருகிறார்கள். அதிமுக பெரிய கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் டெல்லி செல்வது அவர்களுடைய மைனஸாக உள்ளது. அதை விட மிகப்பெரிய மைனஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. தமிழ்நாட்டில் ஒரு நியதி உள்ளது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது விளங்காது. அதனால், ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அந்த வெற்றிடத்தை மற்ற கட்சிகளும் நிரப்ப வாய்ப்பு உள்ளது” எனக்கூறினார்.

விஜய் வருகையால் திமுக கூட்டணி கட்சிகளின் வாக்கு வகைகள் பாதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ”விஜய்க்கு என்று தனி ஆதரவு உள்ளது. அவருடைய ரசிகர்கள் எல்லா கட்சியிலும் உள்ளார்கள். அவர்கள் ஆதரவாளர்களாக மாறும் போது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் ஏற்படும். 2026 தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது” என்று பதிலளித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்

இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கை கொடுக்காதது குறித்த கேள்விக்கு, ”விளையாட்டையும், அரசியலையும் ஒன்று சேர்க்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் ராஜாங்க உறவு ஒன்றும் முறியவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னைகள் இருந்தால் அதை விளையாட்டில் கலக்கக்கூடாது. ஆசிய கோப்பை விளையாட்டு தொடரில் பங்கேற்க ஒப்புக்கொண்ட பிறகு இதுபோல செய்யக்கூடாது. கிரிக்கெட் போட்டி என்பதால் கவனம் பெறுகிறது. இதுவே டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்று விளையாடத்தான் செய்கிறார்கள். அரசியலையும் விளையாட்டையும் கலக்கக் கூடாது” என்று பதிலளித்தார்.

GST வரி குறைப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ”GST வரி குறைப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் இதை முன் கூட்டியே செய்திருக்க வேண்டும்.உலகத்தில் VAT, GST யாக இருந்தாலும் ஒரே வரி தான் உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் பன், பட்டர், பன் பட்டருக்கு ஒரு விலை என தனித்தனியாக வரி இருந்தது இந்தியாவில் தான். இது போல் குழப்பமான GST யை வரி விதித்து சீர் திருத்தியுள்ளார்கள்.GST வரி விதிப்பில் இன்னும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.எல்லா பொருட்களுக்கும் ஒரே GST வரி தான் இருக்க வேண்டும்.அத்தியாவசிய பொருட்களுக்கு GST வரியே போடக்கூடாது” என்று பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சி

கூட்டணி ஆட்சி அமைந்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இடம்பெறுமா? என்ற கேள்விக்கு, ”1967 ஆம் ஆண்டு முதல் ஏக்கம் உள்ளது. அதே ஏக்கம் தான் எதிர்காலத்திலும் இருக்கும். 2006 ஆம் ஆண்டு வாய்ப்பு வந்த போது நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை.அந்த வாய்ப்பு மறுபடியும் வந்தால் காங்கிரஸ் நிச்சயம் அதை பயன்படுத்திக்கொள்ளும்" என்றார்.