மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி Pt web
தமிழ்நாடு

காங்கிரஸ் | டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.. தொகுதிப் பங்கீடு குறித்த திட்டம் என்ன?

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமை என்ன யோசனையில் இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், ஜனவரி 17-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினுடைய அனைவரது கருத்துகளையும் கேட்டறிந்த தேசிய தலைமை, இறுதி முடிவை மேலிடம் எடுக்கும் என்று அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் திமுகவே காங்கிரஸின் முதன்மைத் தேர்வு. சிதம்பரம், திருநாவுக்கரசர் உட்பட மூத்த தலைவர்கள் பலரும் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறிய நிலையில், திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க ராகுல் காந்தி உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ராகுல் காந்தி

அதேசமயம், சென்ற முறையைக் காட்டிலும், கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது, கூடுதலான பங்கைப் பெறுவது என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது. டெல்லி காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, காங்கிரஸ் தரப்பில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதி என்ற கணக்கில் காங்கிரஸுக்கு 38 தொகுதிகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கான கூட்டணியை தனித்துப் பார்க்காமல் தமிழ்நாடு-கேரளா- புதுச்சேரி ஆகிய மூன்றுக்குமான வியூகத்தின் பகுதியாகப் பார்க்கும் காங்கிரஸ், தலைமை ஆட்சியில் பங்கு என்னும் கோரிக்கையையும் வலியுறுத்தும் என்று தெரிகிறது.

திமுக அதற்கு ஏற்கனவே மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், அடுத்த வாய்ப்பாக, புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் முதல்வர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கும் என்று கூறப்படுகிறது. கடந்த, சட்டமன்றத் தேர்தலின்போது ஒரு மாநிலங்களவை இடத்தை திமுக காங்கிரஸுக்கு வழங்கியது. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் அதிக நெருக்கடி இருப்பதால் இரண்டு இடங்களைக் கேட்க முடிவெடுத்துள்ளது.

ஆனால், இவ்வளவு விஷயங்களையும் திமுக ஒப்புக்கொள்வது கடினம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்தச் சூழலில் புதுச்சேரியில் முதல்வர் பதவி எனும் காங்கிரஸின் கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்புண்டு. ராகுல் காந்தி தனக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் உள்ள நெருக்கமான உறவைப் பயன்படுத்தி மாநிலங்களவையிலும்கூட இரண்டு இடங்களைப் பெறலாம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

ஆனால், 38 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புக்கொள்ளாது. அதிலும் காங்கிரஸ் இரண்டு மாநிலங்களவை இடங்களைப் பெறும் பட்சத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளையும்கூட திமுக குறைக்கும் வாய்ப்புண்டு என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். எப்படியாகினும் காங்கிரஸ் இந்த முறை தவெகவுடனான கூட்டணி வாய்ப்பு என்னும் பேச்சைப் பயன்படுத்தி தன்னுடைய பேர வலிமையை கூட்டும் என்றே தெரிகிறது. எப்படியும் இந்த மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீடுகளை முடிக்க இருதரப்பும் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.