தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைத் தேசிய தலைமை அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், இதில் முதல் முறையாக 4 பெண் மாவட்டத் தலைவர்கள் உட்பட 68 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைத் தேசிய தலைமை அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், இதில் முதல் முறையாக 4 பெண் மாவட்டத் தலைவர்கள் உட்பட 68 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தில், டில்லி பாபு, எல்.ரெக்ஸ் உள்ளிட்ட 7 பழைய தலைவர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிரானவர்கள் நீக்கப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதேவேளையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் மீது எழுந்த பணப்பேரப் புகாரால், அந்த மாவட்டத்தில் 3 தலைவர்களுக்கான நியமனம் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் நிர்வாகிகள் எந்த கட்சிக்கும் அடிபணியாமல் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி அறிவுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கு வாழ்த்து கூறி, சமூக வலைதளத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் செயல்பட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை நிரூபிக்க வேண்டியது புதிய தலைவர்களின் கடமை என்றும் பிரவீண் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார். அண்மையில், காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான கேள்விக்கு, சிலருக்கு திமுக கூட்டணியால் ஆதாயம் இருக்கலாம் என்றும், ஊட்டிவிடும் கையை கிள்ளுவார்களா எனவும் பிரவீண் சக்கரவர்த்தி கூறியிருந்த நிலையில், சுயமரியாதை தொடர்பான தற்போதைய அவரது பதிவு பேசுபொருளாகியுள்ளது.