அரசு பேருந்தில் ரீல்ஸ் pt
தமிழ்நாடு

சென்னை | அரசு பேருந்தை ஓட்டியபடியே ரீல்ஸ்.. ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நீக்கம்!

சென்னை மாநகர பேருந்து இயக்கும்போது ரீல்ஸ் எடுத்த ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு 32 லட்சம் பயணிகள் அவற்றில் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் பேருந்துகளை இயக்கும்போது பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ‘ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் செல்போன் பேசிக்கொண்டு பேருந்து இயக்கக் கூடாது, ரீல்ஸ் மற்றும் வீடியோ பதிவுசெய்வது கூடாது’ போன்ற பல விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பேருந்து இயக்கும் போது ஒப்பந்தப் பணியிலிருந்த ‘ஓட்டுநர் மற்றும் நடத்துனர்’ இணைந்து ரீல்ஸ் எடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..

சென்னை மாநகர பேருந்தை இயக்கும்போது ஓட்டுநர் இருக்கை அருகே இருந்துக் கொண்டு நடத்துனர் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். பயணிகள் அனைவரும் பேருந்து இருக்கையில் அமர்ந்து இருக்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட, விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் அவர்கள் இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.