திருப்பரங்குன்றம் மலை விவகாரம் | பக்தர்கள் மலைக்குச் செல்ல தடை; 800க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று ஒரு நாள் திருப்பரங்குன்றம் மலையில் கோவில் மற்றும் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு தடையையும் காவல்துறை விதித்துள்ளது.
பக்தர்கள் மலைக்குச் செல்ல தடை..
முன்னதாக திருப்பரங்குன்றம் மலையை மீட்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டணி கட்சியினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்து முன்னணியின் இந்த அறிவிப்பால் இருதரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட வாய்புள்ளதாக கருதும் போலீஸார் இந்து முன்னணி, சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் போராட்ட அறிவிப்பினால் புதுக்கோட்டை மாவட்டம், எல்லை பகுதியான விராலிமலை அடுத்துள்ள லஞ்சமேடு எனும் இடத்தில் போலீஸார் செக்போஸ்ட் அமைத்து மத்திய மண்டலத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்களை சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர். போலவே திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி 800க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்படுள்ளனர்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது சென்று பக்தர்கள் வழிபட இன்று ஒருநாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.