Complaint filed in court against the Deputy Speaker ravishankar PT
தமிழ்நாடு

தவெக அரசுக்கு அடுத்த நெருக்கடி? துணை சபாநாயருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் : தொடரும் சர்ச்சைகள்!

தன்னை தாக்கி, மிரட்டி வீடியோ எடுக்க வைத்த துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Praveen Joshva L

துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது தாக்குதல் மற்றும் மிரட்டல் குறித்த புகாரால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திக்குமாரின் வீடியோக்கள் மற்றும் நீதிமன்ற மனு தவெக அரசுக்கு புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலணியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், தொகுதி பிரச்சினை குறித்து பேச துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கரை பலமுறை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும், தீபாவளி தினத்தன்று மண்ணச்சநல்லூரில் துணை சபாநாயகர் ரவிசங்கரை சந்தித்து முறையிட்டதாகவும், ஆனால் ரவிசங்கர் தன்னை தாக்கியதாகவும் கூறியிருந்தார். அதோடு துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னை தாக்கியதாக ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

அதன் பின்னர் துணை சபாநாயகர் அருகில் அமர்ந்து அவர் பேசுவது போன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியானது. அதில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது போல் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று கார்த்திக்குமார் கூறியிருந்தார். மேலும் ஒன்றும் இல்லாத விவகாரத்தை தவறாக சித்தரிக்கிறார்கள், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கார்த்திக்குமார் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, துணை சபாநாயகர், காவல் ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோர் சேர்ந்து என்னை மிரட்டி வீடியோ வெளியிட வைத்தார்கள் என்றும், துணை சபாநாயகர் தன்னை தாக்கியது உண்மைதான் என்றும் அதில் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாமானியர் ஒருவரை துணை சபாநாயகர் தாக்கி, பின்னர் அவரை மிரட்டி அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என வீடியோ வெளியிட வைத்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்த நிலையில், தன்னை தாக்கி, பின்னர் வீடியோ வெளியிடுமாறு மிரட்டிய துணை சபாநாயகர், காவல் ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கார்த்திக்குமார் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், தற்போது துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விவகாரங்கள் தவெக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.