தங்கத்தின் விலை வீழ்ச்சி? அது எப்போது பழைய மதிப்பை எட்டும்: தங்கம் வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க!
தங்கத்தின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் வரலாற்று உச்சத்தை எட்டிய பின்னர், தற்போது 1 லட்சத்திற்கும் கீழே சரிந்துள்ளது. இதனால், பழைய உச்சத்தை மீண்டும் எட்ட சில வருடங்கள் ஆகும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கம் வாங்கும் முன் இதை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும்.
கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை திடீர் என அதிகரித்து வந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவு பல மடங்கு அதிகரித்தது. இது சர்வதேச அரங்கில் பெரும் அசாதாரண நிகழ்வாக பார்க்கப்பட்டது.
குறிப்பாக கடந்த ஜனவரி 28-ம் தேதி தங்கம் விலை வரலாற்றில் இல்லாத உச்சமாக சென்னையில் ஒரு சவரன் 1,24,880 என்ற அளவை எட்டியது. ஆனால் அதன்பின்னர் பல்வேறு நிகழ்வுகள் காரணமாக தங்கத்தின் விலை பெரிய அளவில் சரிவை சந்தித்து 1 லட்சத்துக்கும் கீழே இறங்கியது.
நவம்பர் 24-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 93,720 என்ற அளவுக்கு குறைந்தது. அதாவது உச்சகட்டத்தில் இருந்து தங்கம் விலை சவரனுக்கு தற்போது 22 ஆயிரம் குறைந்துள்ளது. இது தங்கத்தின் வரலாற்றில் மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த 1979-இல் சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 850 டாலர் என்ற அளவுக்கு கடுமையாக உயர்ந்தது. இந்திய மதிப்பில் ஒரு சவரன் சுமார் 750-ஆக இருந்த தங்கத்தின் விலை, 1980-இல் கிட்டத்தட்ட இருமடங்காகி 1,360-ஐத் தொட்டது. பின்னர் இந்த உச்ச விலையில் இருந்து தங்கத்தின் விலை கடுமையாக சரிந்து 1999-இல் ஒரு அவுன்ஸ் தங்கம் 252 டாலர் என்ற அளவுக்கு குறைந்தது. அதாவது 70 சதவீதம் சரிந்தது. பின்னர் தங்கத்தின் விலை மீண்டும் தனது பழைய உச்ச அளவான 850 டாலர் என்பதை தொட சுமார் 9 ஆண்டுகள் ஆனது.
அதே போல 2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடியின்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் 1,011 டாலராக இருந்த நிலையில், 2008 இறுதியில் 30 சதவீத சரிவை சந்திதது, 712 டாலர் வரை சரிந்தது. பின்னர் 18 மாதங்களுக்கு பின்னரே மீண்டும் தங்கத்தின் விலை 1,011 டாலர் என்ற பழைய அளவை எட்டியது.
இதன் பின்னர் 2011-ம் ஆண்டு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,920 டாலர் என்ற நிலையில் இருந்து தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து டிசம்பர் 2015-ல் 45 சதவீத சரிவோடு, 1,046 டாலர் என்ற நிலைக்கு வந்தது. பின்னர் மீண்டும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,920 டாலர் என்ற நிலையை 5 ஆண்டுகளுக்கு பின்னர் 2020-ம் ஆண்டு எட்டியது. இதனால் தற்போதும் தங்கத்தின் விலை அதன் பழைய உச்சமான சவரனுக்கு 1 லட்சத்து 24 ஆயிரம் என்ற அளவை எட்ட சில வருடங்கள் ஆகும் என்றே பார்க்கப்படுகிறது. எனவே தங்கம் வாங்குபவர்கள் இந்த பழைய வரலாற்றை தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் தங்கம் வாங்குவது குறித்து திட்டமிடவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

