கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி pt desk
தமிழ்நாடு

கோவை | ஆழியார் ஆற்றில் மூழ்கி பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பொள்ளாச்சி, ஆழியார் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ரா.சிவபிரசாத

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் - வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இதையடுத்து இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஆண்ட்ரூ என்ற மாணவன் ஆற்றில் இறங்கிய போது, தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் அவர் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை கண்ட ரேவன் என்ற மாணவன் அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இருவரும் தண்ணீரில் மூழ்கியதைக் கண்ட தருண் என்ற மாணவன் இருவரையும் காப்பாற்ற முயன்ற நிலையில், அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆழியார் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கிய மூவரின் உடல்களையும் மீட்டனர்.

இதையடுத்து மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஆழியார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.