2008 தொகுதி மறுவரையறைக்குப் பின் உருவாக்கப்பட்டது கோவை வடக்கு. கடந்த 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து அதிமுகவுக்கு வெற்றி தந்த தொகுதி இது. கடந்த முறை அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதிமுக தன் கோட்டையான கோவை வடக்கு தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், கடந்த 2011 தேர்தலில் மயிலாப்பூர், 2016 தேர்தலில் கோவை தெற்கு தொகுதிகளில் தோல்வியடைந்தார்.
2021 தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்த அவர், இந்த முறை வடக்கு தொகுதியில் களமிறங்குவதால் அது நட்சத்திர தொகுதியாகியிருக்கிறது. கவுண்டர்கள், போயர்கள், அருந்ததியர்கள் எனப் பல்வேறு சமூகத்தினரும், சிறு தொழில் புரிவோரும் வாழும் தொகுதி கோவை வடக்கு. கோவை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட இரண்டாவது பெரிய தொகுதியான இதில், தற்போது கிட்டத்தட்ட 2 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு தொழில்களுக்கான மின்சாரக் கட்டணச் சலுகைகள் போன்றவை தொகுதியின் நீண்ட கால கோரிக்கைகளாகவே உள்ளன. தற்போதைய எம்எல்ஏவான அம்மன் அர்ஜுனனின் தொகுதி பணிகளை முன்னிறுத்தி, வானதி வாக்கு சேகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானதிக்குப் போட்டியாக திமுக சார்பில் துறை செந்தமிழ் செல்வன் களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சியின் நர்மதா, தமிழக வெற்றிக் கழகத்தின் சம்பத்குமார் ஆகியோரும் களமிறங்கியிருக்கிறார். கோவை தெற்கில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வடக்கு தொகுதியையும் குறிவைத்திருப்பதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.