மழை நீரை அப்புற்றப்படுத்தும் ஊர்மக்கள்  மற்றும் ஆசிரியர்கள்
மழை நீரை அப்புற்றப்படுத்தும் ஊர்மக்கள் மற்றும் ஆசிரியர்கள் file image
தமிழ்நாடு

கோவை : ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்; களத்தில் இறங்கி மழைநீரை இறைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

PT WEB

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மம்பாளையம் கிராமத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் மழைநீர் பள்ளிகளை சூழ்ந்ததோடு 6 மற்றும் 7ஆம் வகுப்பறைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மருதூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வகுப்பறைகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த ஆட்களை அனுப்புவதாக ஊராட்சி அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஊழியர்கள் வருகைக்காக ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தகவல் தெரிவித்து 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் யாரும் வராததால் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வகுப்பறைகளுக்குள் தேங்கி நின்ற மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் வேலைக்குப் பின்னர் தண்ணீர் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது.

வகுப்பறைக்குள் தேங்கிய மழை நீர்

அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் மழை நீர் புகுந்து அதனை அப்புறப்படுத்தத் தகவல் தெரிவதும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தினரின் இந்த செயல் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.