School students
School students pt desk
தமிழ்நாடு

கோவை: பிரதமரின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்பு... விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு!

webteam

செய்தியாளர்: பிரவீண்

கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற "ரோட் ஷோ" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமரை வரவேற்க 50க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவிகள் சீருடையுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பள்ளியால் அறிவுறுத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மாணவியரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறை இணை ஆணையர் ஆகியோரிடம் அறிக்கைகள் கேட்கப்பட்டு இருப்பதாகவும், விசாரணை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் விதி இருக்கும் நிலையில், பள்ளி சீருடையுடன் மாணவிகள் பிரதமர் நிகழ்வில் பங்கேற்க அழைத்து வரப்பட்டதும், கலை நிகழ்ச்சிகளில் கட்சிக் கொடியுடன் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

இது தொடர்பான காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “தேர்தல் விதிகளை மீறுகிறார் பிரதமர் மோடி. தேர்தலில் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் அனைத்து கட்சியினருக்கும் பொதுவானது. இவற்றை யாரும் மீறக் கூடாது; அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி, இந்த தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக கோவையில் நேற்று நடந்த ரோடு ஷோவில், பாஜக மற்றும் மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை என்பதால், அவர்களுக்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி, அவர்கள் வரவேற்பு கொடுப்பதை போல செய்து இருக்கிறார்கள்.

இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம். மோடி மீதும், பாஜக மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எங்கள் கட்சியின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்றுள்ளார். பல அரசியல் கட்சி தலைவர்களும் குழந்தைகள் நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.