துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் தலைமையிலான ரேஸிங் அணி, மூன்றாவது இடம் பிடித்தது.
இதையடுத்து, திரைத்துறை, விளையாட்டுத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை காட்சிப்படுத்தியதற்காக நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்திற்கும் தேசத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமெனவும் உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் தனது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் பலரையும் ஊக்குவித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்தியுள்ளார். இது பெருமைமிக்க தருணம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அஜித்குமாரை நேரிலேயே கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மாதவன், அவரை நினைத்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தவகையில், நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதை எடுத்துக் காட்டாக குறிப்பிட்டு, சாலை பாதுகாப்பு குறித்து, கோவை மாநகர காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், திறமை இருந்தால் அஜித் குமார் போல களத்திற்கு சென்று வெற்றி பெற்று முன்னேற வேண்டும் என்றும், அப்படி இல்லாமல் சாகசம் செய்வதாக வழக்கு வாங்கி கொண்டு இருக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமானோர் இந்தப் பதிவை, பகிர்ந்து வருகின்றனர்.