முதல்முறையாக தோனியை பாராட்டிய யுவராஜ் சிங் தந்தை.. என்ன சொன்னார் பாருங்க..!
இந்திய கிரிக்கெட்டில் வெளிப்படையான, சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் போனவராக யுவராஜ் சிங்கின் தந்தையும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் இருந்துவருகிறார்.
அந்தவகையில் ”என்னுடைய மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டதற்காக தோனியை எப்போதும் மன்னிக்க மாட்டேன்” என முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை யோக்ராஜ் சிங் முன்வைத்துள்ளார்.
ஆனால் இந்தமுறை யாரும் எதிர்ப்பார்க்கவகையில், எம்எஸ் தோனியிடம் ஒரு வீரராகவும், ஒரு கேப்டனாகவும் பிடித்த விசயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார் யோக்ராஜ் சிங்.
தோனி ஒரு சிறந்த Motivated கேப்டன்..
யூடியூப் சேனல் ‘Unfiltered by Samdish’-ல் பேட்டியளித்திருக்கும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், “தோனியை மிகவும் உற்சாகமான மோட்டிவேட் செய்யக்கூடிய கேப்டனாக நான் பார்க்கிறேன், அவரால் மற்ற வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு சொல்ல முடியும். அதுமட்டுமில்லாமல் தோனியிடம் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் விக்கெட்டைப் படித்து பந்துவீச்சாளர்களுக்கு எங்கு பந்து வீச வேண்டும் என்று சொல்ல முடியும்” என்று புகழ்ந்து பேசினார்.
அத்துடன் ஒரு வீரராக தோனியை போல அச்சமற்றவர்களை பார்க்க முடியாது என்று கூறிய அவர், “தோனியை போல அச்சமற்றவர்களை இந்திய கிரிக்கெட்டில் பார்க்கமுடியாது. ஒருமுறை மிட்செல் ஜான்சன் அதிவேகமான பவுன்சர் மூலம் தோனியின் ஹெல்மெட்டை கடினமாக தாக்கினார். ஆனால் தோனி ஒரு இஞ்ச் கூட நகரவில்லை, அடுத்த பந்திலேயே மிட்செல் ஜான்சனை சிக்சருக்கு பறக்கவிடுவார்” என்று வெளிப்படையாக பாராட்டினார்.
இதற்குமுன் தோனியை கடுமையாக விமர்சித்திருந்த யோக்ராஜ் சிங், ”நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், எனது மகனுக்கு எதிராகச் செயல்பட்டு இருக்கிறார். யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார். தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்துவிட்டார்” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.