செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இவ்வழக்கில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 பேர் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
ஷேக் இதயத்துல்லா, உமர் பாரூக், பவாஸ் ரகுமான், சரண் மாரியப்பன் மற்றும் அபு ஹனிபா ஆகிய 5 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் 5 பேரிடம் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடைசியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஐந்து பேரும் தீவிரவாதத்திற்கு நிதி அளித்தது தெரியவந்துள்ளது. மேலும், தீவிரவாத தாக்குதல் மற்றும் கோவை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் உறுதியானது.
இந்த குற்றப் பத்திரிகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷேக் இதயத்துல்லா தீவிரவாத நிதி அளித்ததும் மட்டுமின்றி அமீர் மற்றும் உமர் பருக் ஆகிய இரண்டு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர்கள், 2021, 2022 காலகட்டத்தில் போலியாக கோவிட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டதும், அந்த மோசடியின் மூலமாக சம்பாதிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி கார் குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு நிதி அளித்ததும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கு பவாஸ் ரகுமான், சரண் தேவையான வசதிகளை செய்து கொடுத்ததும் மேலும் அபு ஹனிபா இந்த மோசடிக்கு பணம் கொடுத்து உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள் வையூர் உயர் பாதுகாப்பு சிறையில் சந்திப்புகளை நடத்தியதும் சத்தியமங்கலம் காடுகளில் திட்டங்களை தீட்டியதும் ஏற்கனவே விசாரணையில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட தீவிரவாத தலைவன் முகமது அசாருதீன் விவகாரத்தில் சிறையில் வைக்கப்பட்டதற்கு எதிராக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.