200 Units of Free Electricity Pt web
தமிழ்நாடு

200 Unit இலவச மின்சாரம் | அரசுக்கு 2000 கோடி கூடுதல் செலவு? வெளியான அதிர்ச்சி தகவல்!

முதலமைச்சர் விஜய் வீடுகளுக்கு 200 Unit இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இதனை அரசுக்கு 2000 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

Praveen Joshva L

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து விழா மேடையிலேயே தனது அரசின் முதல் கையெழுத்தாக 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதனை தவெக தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay

இதனிடையே ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில், தமிழ்நாடு அரசின் இந்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 2,000 கோடி நிதிச் சுமை ஏற்படும் என்று அதிர்ச்சி தகவல் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு மின்சாரத்துறைக்கு மானியத் தொகை வழங்கி வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பால் இப்போது அந்த மானியத் தொகையை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் மானியத் தொகை 10,100 கோடியைத் தாண்டும் என்றும், இதில் 500 யூனிட்டிற்குள் பயன்படுத்துவோருக்கான மானியம் மட்டும் 9,100 கோடியாக இருக்கும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய திட்டத்தின் கீழ், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு அரசு ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் மானியமாக மின்சார வாரியத்துக்கு வழங்கியது. ஆனால், புதிய திட்டத்தின் கீழ் 500 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் 2.45 கோடி நுகர்வோருக்கான முழு கட்டணச் சுமையையும், அதாவது யூனிட்டிற்கு 4.95 ரூபாயை அரசே ஏற்கவேண்டியிருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.