முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  புதியதலைமுறை
தமிழ்நாடு

தஞ்சை | சாலையோர கடையில் சுடச்சுட காஃபி... தீவிர தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

யுவபுருஷ்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கஸ்டாலின் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக நேற்று திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு திருச்சியில் போட்டியிடும் துரை வைகோ மற்றும் பெரம்பலூரில் போட்டியிடும் அருண் நேருவை அறிமுகப்படுத்தி பரப்புரை செய்தார்.

தொடர்ந்து, சாலை மார்க்கமாக இன்று தஞ்சை சென்றவர், அங்கு இருக்கும் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தஞ்சை மக்களவைத் தொகுதி வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டதோடு வாலிபால் விளையாடி மகிழ்ந்தார்.

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், மார்கெட் பகுதியில் இருந்தவர்களையும் சந்தித்தார். அப்போது, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முதலமைச்சரை சந்தித்து பேசினர். ஒருசில பழ வியாபாரிகள், தங்களிடம் இருந்த பழங்களையும் முதல்வருக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பேக்கரி கடைக்குச் சென்ற முதல்வர் காஃபி வாங்கி சாப்பிட்டார். அப்போது, அவருக்கு கொடுத்த காஃபி சூடாக இருந்ததால், உடன் இருந்த சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், காஃபியை வாங்கி சற்று ஆற்றி கொடுத்தார்.

இதனை ரசித்துக்குடித்த முதலமைச்சர் அப்பகுதியில் வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்தார். தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாடு மற்றும் புதுவை உட்பட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளார் CM ஸ்டாலின்.