எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இருட்டில் அமர்ந்துகொண்டு அமாவாசையை எண்ணிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி-க்கு சிலை மற்றும் மணிமண்டபத்தை திறந்துவைத்தார். தொடர்ந்து, காரைக்குடியில் 50 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள கவியரசு முடியரசனார் சிலைக்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும் மருது பாண்டியரின் சிலைக்கும் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து பல துறைகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிவகங்கையில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் என்றும் திருப்பத்தூரில் புதிய புறவழிச் சாலை அமைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் அனைத்து அரசு துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் 89 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்துள்ள முதல்வர், காரைக்குடி நகராட்சிக்கு 30 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்தார். குறிப்பாக, “இருட்டில் அமர்ந்துகொண்டு அமாவாசையை எண்ணிக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்” - என முதல்வர் தெரிவித்தார்.