முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல்
தமிழ்நாடு

“புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி” - பிரதமர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஜெனிட்டா ரோஸ்லின்

நாடு முழுவதும் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் அரசியல் கட்சிகளுக்கிடையேயான வார்த்தை மோதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்தவகையில் பிரதமர் மோடிக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் அமலாக்கத்துறை - வருமானவரித்துறைகளின் ரெய்டு, கைது; கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் வார்த்தை போர் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்

இதில் பிரதமர் மோடியை இன்று காட்டமாக விமர்சித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி” என்று கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த தன் சமூகவலைதள பதிவில்,

“ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

‘இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு’ எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? ” என்றுள்ளார்.