திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க திருச்சி வந்த தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து பெரியாரின் 147ஆவது பிறந்தநாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு தமிழக முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனிடையே முதலமைச்சரின் திருச்சி வருகையை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தோற்றுவித்த தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா இன்று மாலை, கரூர் மாவட்டத்தில், திருச்சி புறவழி சாலையில் உள்ள கோடங்கிபட்டியில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார். அங்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, கனிமொழி, ராஜா, துரைவைகோ, கவிஞர் சல்மா, அருண்நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழன் உள்ளிட்டோர் வரவேற்புக்கொடுத்தனர்.
திருச்சி விமான முனையம் வந்த முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்தார். அங்கு சாலையின் இருபுறமும் திமுக கொடிகளுடனும், முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது உருவப்படங்களை கைகளில் ஏந்தி ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய பேருந்து நிலையம் முன்பாக உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பெரியாரின் உருவப்படம் மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
1967 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, குன்றக்குடி அடிகளார் தலைமையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவருமான காமராஜர், தந்தை பெரியாரின் முழுவுருவ சிலையை திருச்சியில் திறந்து வைத்தார். அந்த சிலைக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.