முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

“மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த மழையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்!” - முதல்வர்

ஜெனிட்டா ரோஸ்லின்

டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலால் பெய்த வரலாறு காணாத மழையும் பாதிப்பும் , அதனைதொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையும், பெரும் சேதமும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்ய தேவையான நிதிகளை வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே பிரதமரிடம் கடிதம் எழுதியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்நிலையில் முதற்கட்டமாக மத்திய அரசு தமிழகத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட வெள்ள நிவாரண தொகையினையும் வழங்கியிருந்தது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்போடு தென் மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையினை கருத்தில் கொண்டு, ‘புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண பணிகளை செய்திட நிதி ஒதுக்க வேண்டும்’ என்று நேற்று இரவு பிரதமரை சந்தித்து மனு வழங்கியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அம்மனுவில் அவர், “மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகளாக இல்லாத கனமழை பெய்துள்ளது.

இந்த இரு மழையாலும் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி அவசர நிவாரண பணிகளுக்காக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.