கலைஞர் நினைவிடம்
கலைஞர் நினைவிடம் Twitter
தமிழ்நாடு

கலைஞர் நினைவிடத்தில் ‘கலைஞர் உலகம்’ என தனி அரங்கம்... சிறப்பம்சங்கள் என்னென்ன?

PT WEB

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில், 2.21 ஏக்கர் பரப்பில் 39 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், கருணாநிதியின் நினைவிடம் மற்றும் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

நிலவறையில் "கலைஞர் உலகம்" என்ற பெயரில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர். நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் கலைஞரின் எழிலோவியங்கள் என்ற தலைப்பில், அவரின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட 8 நூல்களின் விளக்க காணொளி ஒளிபரப்பப்படுகிறது. இதேபோல் சிறப்பம்சமாக கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து - சென்னைக்கு ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொழில்நுட்ப அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

கலையும், அரசியலும் என்ற தலைப்பில் 79 பேர் அமரும் வகையில் மினி திரையரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா நினைவகத்தின் நுழைவுவாயிலில் அண்ணா, இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் இடம் பெற்றள்ளன. அதனை கடந்து சென்றால் அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையும் இடம்பெற்றுள்ளது. இந்த சிலைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.