ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின் web
தமிழ்நாடு

வந்தவேகத்தில் வெளியேறிய ஆளுநர் ரவி.. கடுப்பாகி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையை வாசிக்காமலெயே ஆளுநர் ரவி புறப்பட்டுச்சென்றது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது..

Rishan Vengai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து வெளியேறியதால் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்தார். ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியதால், உரை படிக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆளுநர் உரையோடு அவை தொடங்கவேண்டும் என்ற விதியை திருத்த திமுக முயற்சி மேற்கொள்ளும் என ஸ்டாலின் அறிவித்தார்.

நடப்பு 2026ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் செவ்வாய்க்கிழமையான இன்று தொடங்கவிருந்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கு கொள்வதற்காக வருகைதந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.

இந்தசூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு ஆளுநர் உரை தொடங்கப்படவிருந்தது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதமும் ஒலிக்கப்படவேண்டும் என ஆளுநர் கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை நிறைவடையும்போது மட்டுமே தேசிய கீதம் ஒலிக்கப்படும் என சபாநாயகர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படாததை காரணம் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சட்டப்பேரவையிலிருந்து பாதியிலேயே புறப்பட்டுச்சென்றார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தால் ஏற்கப்பட்ட அரசு உரையை ஆளுநர் படிக்காமல் வெளியேறியதை அடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து ஆளுநர் இப்படி உரையை படிக்காமல் பாதியிலேயே வெளியேறுவது 100 ஆண்டு புகழ்மிக்க அவையை அவமதிக்கும் செயல் என்றும், ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையற்றது என்றும் விமர்சித்தார்.

மேலும் ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியதால், உரை ஆளுநரால் படிக்கப்பட்டுவிட்டது என்ற தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார். அதற்கு அவையிலிருந்தோரும் ஒப்புதல் அளித்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் உரை சபாநாயகர் அப்பாவுவால் படிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரையோடு அவை தொடங்கவேண்டும் என்ற பேரவை விதியை திருத்த திமுக முயலும் என்றும், இது தமிழகத்தில் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் நடந்துவருவதாகவும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து இந்த திருத்தத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்வோம் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.

சட்ட ஒழுங்கு பிரச்னையை பேச அனுமதி அளிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமியும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.