நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்ற பிரேமாவிற்கு புதிய வீடு கட்டித்தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா செப்டம்பர் 25 (வியாழக்கிழமை) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றிருந்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசு கல்விக்காக கொண்டு வந்துள்ள தமிழ்புதல்வன், நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துப் பேசினர்.
அப்போது, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வேலையில் சேர்ந்துள்ள தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேமா தனது வீடு ஒழுகும் நிலை குறித்து கண்ணீருடன் சுட்டிக்காட்டி பேசினார். மேலும், வேலைக்கு சென்று தான் வாங்கிய முதல் சம்பளத்தை தனது அப்பாவிடம் மேடையில் தர விரும்புபவதாகவும் கூறி உருக்கமாக பேசியது, அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்நிலையில், பிரேமா-வுக்கு புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
பிரேமாவின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், அவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இதற்கான ஆணையை, பிரேமாவின் குடும்பத்திடம் தென்காசி ஆட்சியர் வழங்கினார். இந்தக் காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.