தொழிலதிபர் அதானியை சென்னையில் சந்தித்ததாக எழுந்த குற்றச்சாட்டை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாமகவிற்கு முதல்வர் சட்டப்பேரவையில் எழுப்பிய எதிர் கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதானியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் லஞ்ச விவகாரத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில், பாமக உறுப்பினர்கள் நேற்று எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அதானியை நான் சந்திக்கவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டார். அதானி மீது நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை ஆதரிக்க, பாமகவும், பாஜகவும் தயாரா?” என கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், “முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என கூறி பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சரின் கேள்விக்கு பதிலளித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையாக இருந்தாலும் அல்லது வேறு எந்த விசாரணையாக இருந்தாலும் அதனை ஆதரிக்க பாமக தயார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “அதானி குழுமம் தயாரிக்கும் மின்சாரத்தை, இந்திய சூரியஒளி மின் உற்பத்தி கழகத்திடமிருந்து அதிக விலைக்கு வாங்க, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கையூட்டு அளிக்கப்பட்டது என அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அது குறித்தே பாமக விளக்கம் கேட்கிறது. அதேநேரம் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் - அதானி குழுமத்திற்கும் இடையே எந்த நேரடி ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை’ என்றே விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கோ அல்லது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கோ ஆணையிட தயாரா?” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.