தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முன்னதாக, பெரியார் திடலில் எணினி (டிஜிட்டல்) நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி எணினி நூலகம் மற்றம் ஆய்வு மையம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, பெரியாரின் அடையாளமான கைத்தடி போன்ற ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். பின், நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் எத்தனையோ நினைவுப் பரிசுகளைப் பெற்றிருந்தாலும், இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும்.
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை பெற்று மேலெழுந்து நிற்கவும் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் பெரியார். பெரியாரின் நினைவு நாளில், அவரது வாழ்க்கை வரலாற்றை நம் இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில், டிஜிட்டல் நூலகம், ஆய்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெரியார் வாழ்ந்த காலத்தில் தான் சொன்ன முற்போக்கு கருத்துக்களுக்காக கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார். பேசத்தடை, எழுதத்தடை, பத்திரிகை நடத்த தடை, போராட தடை என அத்தனை தடைகளையும் உடைத்து, அவர் நம்மை வீதிகளில் மட்டும் நுழையவிடவில்லை, மண்ணில் வாழும் அத்தனைபேர் மனதிலும் அவர் நுழைந்துள்ளார். பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்தும் அவரைப் பற்றி நாம் பேசிக்கொண்டுள்ளோம். இதுவே அவரது தனித்தன்மை” என தெரிவித்தார்.
முதல்வர் பேசிய முழு காணொளி..