விஜய் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

’புஷ்பா’ பட செய்கை.. ஆக்‌ஷன் செய்த முதல்வர் விஜய்.. அதிர்ந்துபோன சட்டமன்றம்!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் செய்த செய்கை, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும், அவரது கொளத்தூர் தொகுதி தோல்வி குறித்தும் விமர்சித்திருந்தார்.

இதற்கிடையே, முதல்வரின் உரையால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்திருந்தனர். எனினும் தொடர்ந்து பேசிய முதல்வர் தனது உரையை முடிப்பதற்கு முன்பாக, புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் செய்யும் பிரபலமான செய்கையைச் செய்து காட்டினார். அதைப் பார்த்து அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர். முன்னதாக, திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நிறைவுற்றபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதேபோன்று ஒரு செய்கையைச் செய்திருந்தார். அது இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவும் இதே செய்கையைச் செய்துகாட்டினார். தற்போதும் முதல்வர் விஜயும் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.