வைரலான ‘முடிந்துவிட்டது’ சைகை.. விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! pt
தமிழ்நாடு

வைரலான ‘முடிந்துவிட்டது’ சைகை.. விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு பிறகு ‘முடிந்துவிட்டது’ திமுக தலைவர் முதல் ஸ்டாலின் காட்டிய சைகை இணையத்தில் வைரலாகிவருகிறது.

Rishan Vengai

திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்படும் போது, ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்பதை சைகை மூலம் தெரிவித்தார். இது இணையத்தில் வைரலாகி, அவர் விளக்கம் அளித்தார்.

'இருக்கா.. இல்லையா..’ என்ற சினிமா பட வசனம் போலதான் திமுக-காங்கிரஸ் கூட்டணியானது இறுதிவரை இழுத்தடிக்கப்பட்டு ஒரு முடிவை எட்டியுள்ளது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற குரலை எழுப்பி வந்த காங்கிரஸ், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 39 தொகுதிகளை வழங்கவேண்டும் என திமுகவிடம் கோரிக்கை வைத்தது.

ஆனால் 25 தொகுதிகளுக்கு மேல் வழங்க மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தநிலையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

காங்கிரஸ், திமுக

இந்தசூழலில் தான் என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பான சூழலில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில், காங்கிரஸுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு, தற்போது மேலும் 3இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக - காங்.கூட்டணி வரலாற்றில் புதிய உச்சமாக, தொடர்ந்து 4 தேர்தல்களில் போட்டியிடுகிறது. இதன்மூலம், பெரும் ஒருங்கிணைப்பாளர் என நிரூபித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வைரலான முதல்வரின் சைகை.. ஸ்டாலின் விளக்கம்!

காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பின், அண்ணா அறிவாலயத்தில் இருந்து முதல்வர் காரில் புறப்படும்போது, ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்பதை குறிப்பிடும் வகையில் சைகை காட்டினார். அவரின் சைகை இணையத்தில் வைரலாகி பேசுபொருளான நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று இரவு வரை கூட்டணிக் கட்சியோடு பேசி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்துள்ளேன். காங்கிரஸ் உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்தது என நான் சொன்னது வைரல் ஆகிவிட்டது. செய்தியாளர்களிடம் நான் காட்டிய சைகை திட்டமிட்டு செய்தது அல்ல. முடிந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேட்டனர், அதற்கு நான் முடிந்துவிட்டது எனக் கூறினேன். எல்லாம் முடிந்தது என நான் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது” என கூறினார்.