Chennai transport plans for the next 25 years pt web
தமிழ்நாடு

சென்னை போக்குவரத்தில் பெரும் புரட்சி.. அடுத்த 25 ஆண்டுகளில் மொத்தமாக மாறும் சென்னை!

நீர்வழிப் போக்குவரத்து, மின்சார டிராம்கள் எல்லாம் சென்னையில் இருந்தால் எப்படி இருக்கும்? ஆம், அடுத்த 25 ஆண்டுகளில் சென்னையின் போக்குவரத்துக் கட்டமைப்பு பெரும் மாறுதலுக்கு உள்ளாக இருக்கிறது. இந்தப் புதிய திட்டம் தொடர்பான விவரங்களைப் பார்க்கலாம்.

PT WEB

சென்னையில் போக்குவரத்து மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகமாகின்றன. வாட்டர் மெட்ரோ, டிராம்கள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் விரிவாக்கம், பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை இதில் அடங்கும்.

சென்னையில் தினமும் 60 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இவர்களில் மாநகரப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை 32 லட்சம். மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை 3.2 லட்சம். புறநகர் ரயிலில் பயணிப்போர் 9.4 லட்சம்.

இந்நிலையில், முழுமையான போக்குவரத்துத் திட்டத்தின் பகுதியாக சென்னைப் போக்குவரத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. இந்தத் திட்டங்களின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய். இதன் ஒரு பகுதியாக கேரளத்தின் வாட்டர் மெட்ரோ பாணியில் பக்கிங்காம் கால்வாயில் நீர்வழிப் போக்குவரத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல வாட்டர் மெட்ரோ திட்டமானது சென்ட்ரல் - கோவளம், கோவளம் - மாமல்லபுரம் இடையே திட்டமிடப்பட்டுள்ளது..

சென்னையில் டிராம் சேவை

70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் டிராம்கள் ஓட இருக்கின்றன. தி.நகரில் இருந்து ஆயிரம் விளக்கு வரை இதற்கான பாதை அமைக்கப்பட இருக்கிறது. மேலும், மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தைத் தாண்டி புதிய விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன் ஒருபகுதியாக கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக செங்கல்பட்டு வரையிலும், தாம்பரத்தில் இருந்து அடையாறு வரையிலும் என்று பல கட்டங்களாக மெட்ரோ ரயில் போக்குவரத்து விரிவாக்கம் பெற இருக்கிறது.

புறநகர் ரயில்களுக்கான வழித்தடங்களும் பாதைகளும் அதிகரிக்கப்பட இருக்கின்றன. எண்ணூர், காட்டுப்பள்ளியிலிருந்து மாமல்லபுரம் வரை, ஸ்ரீபெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரை புதிய பாதையும், தாம்பரம் - செங்கல்பட்டு, அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே கூடுதல் வழித்தடங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகள் எண்ணிக்கையையும் மூவாயிரத்து 481-இல் இருந்து எட்டாயிரத்து 533-ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.