
கத்தாரில் முதன்முறையாக ஏர் டாக்ஸி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று நடந்த ஏர் டாக்ஸியின் வெள்ளோட்டத்தின்போது, கத்தாரின் பழைய தோஹா (DOHA) விமான நிலையத்திலிருந்து கத்தாரா கலாச்சாரக் கிராமம் வரையிலும் ஏர் டாக்ஸி பறந்தது. இதன் மூலம் பாதுகாப்பானதும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதும், இயற்கைக்கு உகந்ததும், புதுமையானதுமான போக்குவரத்து முறையை கத்தார் முன்னெடுத்திருக்கிறது என்று கத்தார் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து மீட்டுவர சர்வதேச காவல் துறையின் உதவியை நாட வங்கதேசம் முடிவு செய்துள்ளது. ஹசீனாவை திருப்பியனுப்ப வேண்டும் என இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, உரிய ஆலோசனைகளுக்கு பின் இவ்விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என இந்தியா தெரிவித்திருந்தது. இதற்கிடையே ஷேக் ஹசீனாவை பாதுகாக்க இந்தியா உதவ வேண்டும் என அவரது அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
தைவான் நாட்டுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாசம்ஸ் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா விற்க உள்ளது. சீனாவிடம் இருந்து தைவானுக்கு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பை தைவான் வாங்குகிறது. தைவான் தன்னை பலப்படுத்திக்கொள்வதற்கு அமெரிக்காவிடம் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களை அமெரிக்காவின் நாசம்ஸ் அமைப்பை பயன்படுத்தி உக்ரைன் சமாளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியா நாட்டின் குவாரா மாநில தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். எருகு நகரில் உள்ள சிஏசி தேவாலயத்தில் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தூப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தூப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா 3 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஜியுகுவான் விண்வெளித் தளத்திலிருந்து புறப்பட்ட லாங் மார்ச் 2 சி ராக்கெட் இந்த 3 செயற்கைக் கோள்களையும் ஏந்திச்சென்றது. இந்த 3 செயற்கைக்கோள்களும் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட உள்ளன.
உக்ரைனின் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டமைப்புகளை குறிவைத்து 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளால் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள டெர்னோபில் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்குதலுக்கு இலக்கானதில் 25 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ தெரிவித்துள்ளார். 70க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் 17 குழந்தைகள் உள்பட 47 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள செமுரு எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அந்த நாட்டின் எரிமலை முகமை அதிகபட்ச எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தோனேஷியாவில் கிட்டத்தட்ட 130 செயல்படும் எரிமலைகள் உள்ளன. மூவாயிரத்து 600 மீட்டர் உயரமுள்ள செமுரு எரிமலை அவற்றுள் ஒன்றாகும். செமுரு எரிமலை 2 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் புகையைக் கக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், அந்த எரிமலையிலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் யாரும் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மெக்சிகோவில், சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹாட் ஏர் பலூன் மரத்தில் சிக்கியது, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாட் ஏர் பலூன் தரையிறங்கும்போது நிகழ்ந்த இந்த விபத்தின்போது, அதில் பயணித்தவர்கள் மரக்கிளைகளில் மோதாமல் இருக்க கீழே குனிந்து உயிர் தப்பினர். அப்போது, அவர்கள் சிரிக்கும் சப்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பலூனில் பயணித்த செவில்லா என்பவர் கூறியபோது, விபத்து நேரிட்ட தருணம் பயங்கரமாக இருந்ததாகவும், தற்போது அது வேடிக்கையாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
லெபனானின் தெற்குப் பகுதி நகரமான சிடோனில் உள்ள பாலஸ்தீனியர்கள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தவர்களை குறிவைத்தே தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதனை மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் இந்தியாவுக்கான இரண்டு துணைத் தூதரகங்களை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்துள்ளார். யெகாடெரின்பர்க் மற்றும் கசான் ஆகிய இரு நகரங்களில் இந்த துணைத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், ரஷ்யாவில் வாழும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.