செய்தியாளர்: ஆனந்தன்
சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பிரிந்து தனது 8 வயது மகளுடன் வசித்து வருகின்றார். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை விளையாடச் சென்றுள்ளார். இதையடுத்து இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த தந்தை, உடனே அக்கம்பக்கத்தில் மகளை தேடியுள்ளார். பின்னர் சிறுமியின் தோழியிடம் கேட்ட போது சிறுமி, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜி வீட்டிற்குச் சென்றாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை உதவி ஆய்வாளர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, சிறுமி அங்கு மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்ததோடு குழந்தையை மீட்டு விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது சிறுமியை உதவி ஆய்வாளர் ராஜி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.. இதனைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் உதவி ஆய்வாளர் வீட்டை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
இதையடுத்து மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் அடிப்படையில் மகளிர் போலீசார் உதவி ஆய்வாளர் ராஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது தந்தை அடித்து துன்புறுத்தியது குறித்தும், சம்பவத்தன்று 8 வயதுடைய சிறுமி பேசியதை செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
நேற்று வரை சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்தாக எழுந்த குற்றச்சாட்டில் உதவி ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை, சிறுமியை அவரது தந்தை அடித்து துன்புறுத்தியதால் பயந்து சிறுமி உதவி ஆய்வாளர் ராஜி வீட்டிற்குச் சென்றதாகவும், அப்போது உதவி ஆய்வாளர் சிறுமியை சமாதானம் செய்து அவரது தந்தை மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மற்றபடி எந்த சம்பவமும் நடைபெற வில்லை என தகவல்கள் வெளியான நிலையில், இன்று உதவி ஆய்வாளர் ராஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.