கோவை | மாரடைப்பால் மயங்கி விழுந்த முதியவர்.. உடனே காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டுகள்!
செய்தியாளர்: சுதீஷ்
கோவை ரயில் நிலையத்தில் ரயில்கள் வரும் போதும், புறப்படும் போதும் பயணிகளின் நடவடிக்கைகளை ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவின் தலைமை காவலர் சதீஷ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த காவலர் சதீஷ் அவரை மீட்டு ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் உகேந்திர குமாருக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் வரும் வரை காத்திருக்காமல் காவலர் சதீஷ் முதியவருக்கு சி.பி.ஆர் முதல் உதவி மேற்கொண்டார் அவருடன் காவலர் ரினிஸ் இணைந்து சி.பி.ஆர் முதல் உதவியை வழங்கினார். இதையடுத்து மயக்கம் அடைந்த முதியவர் நினைவு திரும்பியது, இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக முதியவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றிய சதீஷ் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.