பிலால் உணவகத்திற்கு பூட்டு போட்ட அதிகாரிகள் pt desk
தமிழ்நாடு

சென்னை | பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் - பிலால் உணவகத்திற்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி கடைக்கு தற்காலிகமாக பூட்டு போட்டு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். மவுண்ட் ரோட்டில் உள்ள பிலால் ஹோட்டல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ஆனந்தன்

திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள பிலால் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டு பாதிப்படைந்தனர். இதையடுத்து புகாரியின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சோதனை செய்ய வந்தனர். ஆனால், கடை உரிமையாளர்கள் இல்லாத காரணமாக தற்காலிகமாக கடையை பூட்டு போட்டுச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ் குமார்... திருவல்லிக்கேணி சாலையில் உள்ள பிலால் பிரியாணி கடையில் சாப்பிட்ட 20 நபர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் கடையில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார்கள். உணவு வாங்கி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மக்களிடமிருந்து எங்களுக்கு நேராக புகார் வந்தது. புகார் அடிப்படையில் சோதனை செய்ய வந்தோம். மதியம் ஒரு மணி அளவில் இந்த கடையை திறப்பார்கள். ஆனால், கடைகள் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்களது தொலைபேசியை தொடர்பு கொண்ட போது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர்கள் உதவியுடன் இந்த கடைக்கு பூட்டு போட்டுள்ளோம்.

கடை உரிமையாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேட இருக்கிறோம். பூட்டை உடைத்து இங்கு இருக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் சொல்லக் கூடாது. அவர்களிடம் விளக்கம் கேட்கும் வரை இந்த கடையை திறக்க விடமாட்டோம். மவுண்ட் ரோட்டில் உள்ள பிலால் கடை குறித்து எங்களுக்கு தகவல் வரவில்லை. சிறிய கடை பெரிய கடை என்றெல்லாம் பார்த்து சோதனை செய்ய மாட்டோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றார்..