செய்தியாளர் - கார்த்திகேயன்
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான, பருவமழை கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அன்று தொடங்கி, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வடமாவட்டங்களில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. டெல்டாவை பொறுத்தவரை திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இப்படி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை ருத்ரதாண்டவம் ஆடி வரும் சூழலில், ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, கனமழை எங்கு எப்போது பொழியும்? எந்த பகுதியை சேர்ந்த மக்கள் உஷாராக இருக்க வேண்டும்? எங்கு புயல் உருவாகலாம்? போன்ற வானிலை ஆய்வு மையத்தின் முன் அறிவிப்புகள், மழை காலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வெப்பநிலைமானி, காற்றழுத்தமானி, காற்றின் திசை மற்றும் வேகமானி, மழைமானி, டாப்ளர் வானிலை ரேடார்,வானிலை செயற்கைக்கோள்கள், வளிமண்டல மேல் அடுக்குக் கருவிகள், கடல்சார் கண்காணிப்பு கருவிகள், சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றின் மூலமாக தான், வானிலை ஆய்வு மையம் துல்லியமான கணிப்புகளை வெளியிடுகின்றன.
இதில், ரேடார் என்ற கருவியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அடுத்த 2 முதல் 6 மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்யுமா? இல்லையா? என்பதை கண்டறிய, ரேடார் கருவி தான் முதன்யைமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில், உடனடி மழை எச்சரிக்கை விடுக்க, இந்த கருவி தான் உதவுகின்றன. செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருந்து ஒட்டுமொத்த மேகக்கூட்டத்தைக் கண்காணிக்கும் வேளையில், ரேடார்கள் தரையிலிருந்து குறிப்பிட்ட எல்லைக்குள் நடக்கும் உடனடி மாற்றங்களை மிகத் துல்லியமாகக் கணிக்கின்றன.
எனவே, வானிலையை கணிப்பதற்காக, சென்னையில் பள்ளிக்கரணை, கோட்டை ஆகிய இரண்டு பகுதிகளில், ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகரணையில் உள்ள X Band ரேடார் கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் வரை உள்ள அனைத்து தரவுகளையும் துல்லியமாக வழங்கும். கோட்டையில் உள்ள S band ரேடார் 400 கிலோமீட்டர் வரை உள்ள தரவுகளை துல்லியமாக வழங்கும். இதில் கோட்டையில் உள்ள ரேடார், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இந்த கருவி செயல்படாமல் போனதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.