செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (24). ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் இவர், ராதிகா (20), என்பவரை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ராதிகாவுக்கு கடந்த 27ஆம் தேதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அப்போது குழந்தை ஒரு கிலோ நானூறு கிராம் எடையுடன் இருந்ததாகவும், எட்டு மாதத்தில் பிறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தைக்கு மஞ்சள் காமாலையும் எடை குறைவாகவும் பிறந்ததால் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது
இதனால் மனமுடைந்த நிலையில் யுவராஜ், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் கண்ணாடியை தனது கைகளால் அடித்து உடைத்துள்ளார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கண்ணாடியை உடைக்கும் பொழுது கண்ணாடி கையை கிழித்ததில் பலத்த காயமடைந்து யுவராஜ் கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அதே மருத்துவமனையின் அவசர பிரிவில் அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை அவசர சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனை தரப்பில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை.