சேலம்: விபத்தில் சிக்கிய காரில் இருந்து மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பறிமுதல்
செய்தியாளர்: S.மோகன்ராஜ்
பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கும்பகோணம் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று மாசிநாயக்கன்பட்டி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவர் ஆகியோர் காரை நிகழ்விடத்திலேயே விட்டு விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சுஜாராம் மாலி என்பவரை கைது செய்த நிலையில், விபத்தில் சிக்கிய காரை சோதனையிட்டனர். அப்போது காரில் சுமார் 15 கிலோ எடை கொண்ட 30 மூட்டை ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பொருட்களை கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியேடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கண்பத்ராராம் என்பவரை தேடி வருகின்றனர்.