செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் மெட்ரோ இறக்கத்தில் நேற்று மாலை சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து அங்க வந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த விபத்தில் இரண்டு கார்கள், இரண்டு ஆட்டோக்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்படுத்தியதும், இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சொகுசு காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சொகுசு கார் ஓட்டுநர், மது போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து விபத்தில் காயமடைந்த சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில், கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர், பெரம்பலூர் மாவட்டம் லப்பை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பதும். இவர், நடிகர் பாபி சிம்ஹாவின் வாகன ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் புஷ்பராஜை சிறையில் அடைத்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், பாபி சிம்ஹாவின் சொகுசு காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.