செய்தியாளர்: ஆனந்தன்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி விக்னேஷ் (27). இவர், சென்னை வடபழனி திருநகர் முதல் தெருவில் உள்ள கேட்டரிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சாண்ட்விச் எந்திரத்தை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடனே அவரை உடன் பணிபுரிந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வடபழனி போலீசார், உடலை கைப்பற்றி கே.கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.