சென்னை முகநூல்
தமிழ்நாடு

சென்னையில் தொடங்குகிறது 48 ஆவது புத்தக காட்சி! நேரம், தேதி தெரியுமா?

புத்தகத்தின் பக்கங்கள், அறிவின் ஜன்னல்களை அகலத் திறக்கின்றன. புத்தகத்தைப் போன்ற நண்பன் வேறு யாரும் இல்லை. அந்த புத்தகங்களின் ஒன்றுகூடலாக, வாசிப்பை நேசிப்போருக்காக சென்னையில் தொடங்குகிறது 48 ஆவது புத்தக காட்சி.

PT WEB

புத்தகத்தின் பக்கங்கள், அறிவின் ஜன்னல்களை அகலத் திறக்கின்றன. புத்தகத்தைப் போன்ற நண்பன் வேறு யாரும் இல்லை. அந்த புத்தகங்களின் ஒன்று கூடலாக, வாசிப்பை நேசிப்போருக்காக சென்னையில் தொடங்குகிறது 48 ஆவது புத்தக காட்சி.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 48 ஆவது புத்தக காட்சி சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 27 ஆம்தேதி தொடங்கி, ஜனவரி 12 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகை சமயத்தில் விற்பனை குறைவதால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே நடத்தி முடிக்கும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

2 லட்சம் சதுரஅடி பரப்பளவில், புத்தக காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு 20 கோடி ரூபாய்க்கும் அதிக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட கூடுதல் தொகைக்கு விற்பனையாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரங்கு பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த முறை எடுக்கப்படும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் முருகன் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “புத்தக காட்சியையை முன்னிட்டு சுமார் 10,000 கார்களும், 50,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி, கழிவறை, உணவக வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு எட்டரை மணி வரையும் புத்தக காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஓவிய போட்டிகளும் அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் புத்தகக் காட்சியை இலவசமாக பார்க்கும் வகையில், பத்து லட்சம் இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாகவும் பபாசி தெரிவித்துள்ளது.