செய்தியாளர்: எழில்
வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை - கும்மிடிப்பூண்டி வழியே பயணிக்கின்றன. ஆந்திரா வழியே சென்னைக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட நிலையில், அதில் இருந்து 3 பைகள் வெளியே வீசப்பட்டன. தண்டவாளம் அருகே விழுந்த அந்தப் பைகளை அங்கு தயாராக இருந்த மர்ம நபர்கள் எடுத்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரள்வதைக் கண்ட மர்ம கும்பல் ஒரு பையை விட்டுவிட்டு 2 பைகளுடன் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் பையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது பண்டல் பண்டலாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியே ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் சாலை வழியே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பலின் கைவரிசை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை ரயில்வே பாதுகாப்பு படையினர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் இருந்து கஞ்சா பை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.