செய்தியாளர்: உதயகுமார்
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன்களான நிவாஸ் (16), ரித்தீஷ் (14) ஆகிய இருவரும் பள்ளி விடுமுறையை கழிக்க சதுரங்கப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று புத்தாண்டு என்பதால் சதுரங்கப்பட்டினம் அருகே உள்ள கடல் முகத்துவாரம் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேரம் கழித்து இருவருடைய உடல்களும் கரை ஒதுங்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டின் முதல் நாளிலேயே இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது