செய்தியாளர்: உதயகுமார்
சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர், தனது மனைவி சரண்யா, மனைவியின் சகோதரி ஜெயா மற்றும் குழந்தைகளுடன், திண்டுக்கல் மாவட்டம் வீரசிக்கம்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே கார் சென்ற போது, எதிர் திசையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார், கட்டுப்பாட்டை இழந்து திசையில் வந்து இவர்கள் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த காரில் பயணம் செய்த கணபதி மற்றும் அவரது உறவினர் ஜெயாவின் குழந்தைகளான பாலா (10), ஹேமா (13) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படாளம் போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலியில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்