மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கும் தவெக தலைவர் விஜய், கடந்த இரண்டு வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூரில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தினார். அந்த வகையில் வருகிற 27ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்திலும், கரூர் மாவட்டத்திலும் அவர் பரப்புரை செய்ய உள்ளார்.
இந்த சூழலில் இன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை செய்வதற்கான அனுமதி மற்றும் நாமக்கல் நகரில் இடம் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற 27-ம் தேதி சனிக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரை செய்ய காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தவெகவினர் நாமக்கல் நகரில் உள்ள பொய்யேரி சாலை, மதுரை வீரன் கோவில் அருகே தேர்வு செய்திருந்தனர். தவெகவினர் தேர்வு செய்த இடத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படும், பொதுமக்கள் அவதிக்குள்ளாவர்கள் என்பதால், அந்த இடத்தை தவிர்த்து மாற்று இடமாக சேலம் சாலையில் உள்ள பொன்நகர், நான்கு தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தவெகவினர் மதுரைவீரன் கோவில் அருகில்தான் தங்களுக்கு வேண்டும் என உறுதியாக கூறியுள்ளனர். மேலும், தங்களது தலைமையிடம் ஆலோசனை மேற்கொள்வதாக தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில், நாமக்கல் வருகை தரும் விஜய் நகரில் எங்கு பேச உள்ளார்..? காவல்துறையினர் அனுமதி எங்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை தொடர்பாக, தவெக தரப்பில் விசாரிக்கையில், இடம் தேர்வில் இன்னும் சிக்கல் நீடிப்பதாக தெரிவித்துள்ளனர்.