அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாமூல் பிரியாணிக்காக ஞானசேகரனுடன் தொடர்பு வைத்துக்கொண்ட 6 காவலர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஞானசேகரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சிறப்பு புலனாய்வுக்குழு ஆய்வு செய்தனர். அப்போது, அடையாரைச் சேர்ந்த ஆறு காவலர்கள் தொடர்ச்சியாக ஞானசேகரனை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. காந்தி நகர் பகுதியில் ஞானசேகரன் வைத்துள்ள பிரியாணி கடையில் காவலர்கள் பணமில்லாமல் பிரியாணி வாங்கிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த 6 காவலர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர், வழக்கு தொடர்பாக ஏதேனும் பேசி இருக்கிறார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.