குழந்தைகளை சிரிக்க வைக்க நாம் அவர்களை மேலே தூக்கிப்போட்டு பிடிப்போம். அப்படி இயல்பாக குழந்தையை மேலே தூக்கிப்போட்ட தந்தையின் செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது.
சென்னை, சூளைமேடு அருகே தயாளு அம்மாள் தெருவில் வசித்துவந்தவர் சந்தோஷ். பெயர் பலகை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துவந்த சந்தோஷின் மனைவி சத்யா, வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், இளைய மகனுக்கு 2 வயதாகிறது.
இந்நிலையில், நேற்று வேலை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய சந்தோஷ், தனது மகனுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். மகனை மேலே தூக்கிப்போட்டு பிடித்து விளையாடியபோது அவன் உற்சாக மிகுதியில் துள்ளியிருக்கிறான். அப்போது மேலே இருந்த சுற்றிக் கொண்டிருந்த சீலிங் ஃபேன், எதிர்பாராத விதமாக குழந்தையின் தலையை சீவியது. இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வெள்ளமாக கொட்ட... துடிதுடித்த குழந்தையை பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவனுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளனர். உடனடியாக அவனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும் மாற்றியுள்ளனர். இந்நிலையில், அந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையை கொஞ்சும் போது சீலிங் ஃபேனில் குழந்தையின் தலை வெட்டி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்... நாமும் சிறுவர்களோடு விளையாடும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.