கரூர் துயர வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையின்போது, மாலை 4 மணிக்கு மேல்தான் விஜய் மதிய உணவு சாப்பிட்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. காலை 11:30 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணையில், டிஎஸ்பி அந்தஸ்திலான அதிகாரி தலைமையிலான குழு, 90 கேள்விகளைக் கொண்ட ஒரு கையேட்டை அவரின் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
அதில், கரூரில் பரப்புரை மேற்கொண்ட நாளில் என்ன நடந்தது என்பது பற்றிய கேள்விகள் முக்கியமாக இருந்ததாகவும், விஜய் பரப்புரை பகுதிக்கு ஏன் தாமதமாக வந்தார் என்பதிலிருந்து கேள்விகள் தொடங்கி, அதே இரவில் அவர் ஏன் சென்னைக்குத் திரும்பினார் என்பதில் கேள்விகள் முடிந்ததாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைக்குமாறு விஜய் விடுத்த கோரிக்கையை சிபிஐ ஏற்றுக்கொண்டதாகவும், மாலை 6.15 மணியளவில் விஜய் சிபிஐ வளாகத்தைவிட்டு வெளியேறியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.