அஜித் குமார் - நிகிதா web
தமிழ்நாடு

மடப்புரம்| “அஜித் குமாரின் மரணம், காவல் மரணம் என்பது உறுதி..” சிபிஐ அளித்த விளக்கம்! முழு விவரம்

கடந்தாண்டு ஜூன் மாதம் ஆயுதப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் தான் என்றும், நிகிதா அளித்த புகார் பொய்புகார் என்பதும் உறுதியாகியுள்ளதாக சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளது..

PT WEB

அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் என சிபிஐ உறுதிப்படுத்தியுள்ளது. 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. நீதிபதி, நகை திருடு புகாரின் உண்மைத்தன்மையை கேள்வி எழுப்ப, சிபிஐ தரப்பில் சாட்சிகள் இல்லாததால் புகார் முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. வழக்கு பிப்ரவரி 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28ஆம் தேதி உயிரிழந்தார்.

திருப்புவனம் அஜித் குமார்

இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்களான ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.

அஜித்குமாரின்  மரணம், காவல் மரணம் என்பது உறுதி..

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது சிபிஐ தரப்பிடம் நீதிபதி, " உங்களுடைய விசாரணையில் என்ன தெரிய வந்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிபிஐ தரப்பில், "அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. DSP, காவல் ஆய்வாளர் தலைமை காவலர் தனிப்படை காவலர்கள் என இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

நிகிதா

அதையடுத்து நீதிபதி நகை திருடு போனதாக  புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிபிஐ தரப்பில், "அதற்கு சாட்சிகள் இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கையே தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்? என கேள்வி எழுப்பினார். 

உயர்நீதிமன்ற மதுரை கிளை

தொடர்ந்து ஒரு நபர் மீது இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். அதற்கு, "முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது" என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், "இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமின் வழக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, " வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்கு பாடம் புகட்டுவோம்" என குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.